
புதுவை அருகே சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகிறார்கள்.
மேலும் அரவிந்தர் அன்னையின் கனவு நகரமாக ஆரோவில்லை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் கடந்த மாதம் விரிவாக்க பணிகள் நடைபெற்றபோது மரங்கள் வெட்டப்பட்டது.
இதற்கு ஆரோவில்லில் உள்ள வெளிநாட்டினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை பசுமை தீர்ப்பாயம் மரம் வெட்டும் பணிக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது.
ஆனால், ஆரோவில் நிர்வாகம் விரிவாக்க பணியை மேற்கொள்ள தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தலைமையில் ஆரோவில் 58-வது ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆரோவில் அறக்கட்டளை மையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஆட்சி மன்றக் குழு செயலர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அன்னையின் கனவு திட்டமான ஆரோவில் விரிவாக்க பணிகள் தொடங்கியபோது ஏற்பட்ட எதிர்ப்புகள். ஆரோவில் நிர்வாகத்திற்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் கொண்டுவந்த தடை ஆணை. தற்போது உயர்நீதிமன்றம் ஆரோவில் நிர்வாகத்திற்கு அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆரோவில் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க இரு மாநில கவர்னர்கள் வருகை தந்ததையொட்டி கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.